மண்முனைமேற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் கலாசார அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச கலாசார விழாவும் கலை இலக்கிய பெருவிழாவும் நிகழ்வானது பிரதேச செயலாளரும், பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபையின் தலைவருமாகிய திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2025.11.14 ஆம் திகதி காலை 9.31 மணி முதல் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

பிரதேச செயலக கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகாரசபை இணைந்து பிரதேச மட்டத்திலான கலை இலக்கிய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக மாணவர்களிடையே கவிதை, சிறுகதை, பாடல் நயத்தல், கதை சொல்லுதல் போன்ற போட்டிகளை பாலர் பிரிவு, சிறுவர் பிரிவு, கனிஸ்ட பிரிவு, சிரேஸ்ட பிரிவு, அதி சிரேஸ்ட பிரிவு மட்டங்களிலும், திறந்த பிரிவில் சிறுகதை, கவிதை (மரபு, புது) சிறுவர் கதை ஆக்கப் போட்டி மற்றும் திரைப்பட விமர்சனப் போட்டி என்பன நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதேச கலைமன்றங்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டதுடன் விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன் போது 2024ம் ஆண்டு இலக்கிய போட்டியில் பிரதேசத்திலிருந்து தேசிய ரீதியில் போட்டியில் பங்குபற்றிய மாணவியை பாராட்டி கௌரவம் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்வில் மண்முனைமேற்கு பிரதேச சபையின தவிசாளர் வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கலாசார பேரவை மற்றும் அதிகார சபை உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.















